செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், "வேடந்தாங்கல் சரணாலயம் 29.51 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக, இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய விலங்குகள் நல வாரியத்திற்கு சரணாலயத்தின் பரப்பைக் குறைப்பது குறித்து கருத்துரு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்தப் பதிலும் மத்திய அரசு தரப்பிலிருந்து வரவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் மத்திய விலங்குகள் நல வாரியத்தை அணுகி, உரிய நிவாரணத்தை தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.