ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி சோதனைச் சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டுச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், தென் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.
இங்கு வாரந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வரும். வாரம் 3 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று (ஏப்.22) சந்தை அதிகாலை 6 மணிக்குப் பிறகே கூடியது. ஈரோடு அதன் சுற்றுப்புற மாவட்டத்திலிருந்து மட்டுமே காலை 7 மணிக்கு மேல் தான் மாடுகள் வரத் தொடங்கியது.
இருப்பினும் தென் மாவட்டம், மலைப்பகுதியைச் சேர்ந்த மாடுகள் வரத்தில்லாததால் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. அதேபோல், கரோனா தொற்று அச்சம், இ-பாஸ் கட்டாயம், ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் ஒருவர் கூட சந்தைக்கு வரவில்லை.
சந்தைக்கு வந்த மாடுகளும் நீண்ட நேரம் விற்பனை ஆகாமல் சந்தையில் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த வாரம் கூடிய சந்தையில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தவர்கள் கவலையடைந்தனர்.
இதுகுறித்து மாட்டுச் சந்தை மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது, `இந்த வாரம் கூடிய சந்தையில் மாடுகள் வரத்து குறைந்திருந்தது.
பசு 350, எருமை -100, கன்று-50 என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வந்தது. சந்தைக்குத் தொலைதூரத்திலிருந்து வரும் விவசாயிகள், கால்நடை வளர்பவர்கள் அவர்களது மாடுகளை வாகனங்களில் ஏற்றி நள்ளிரவில் புறப்பட்டு, சந்தைக்கு அதிகாலை வருவார்கள்.
இந்த வாரம் ஊரடங்குக் காரணமாகப் பகலில் தான் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். சந்தைக்கு காலை 10 மணி வரை தொடர்ந்து மாடுகள் வந்துகொண்டிருந்தன. எப்போதும் 11 மணிக்கு நிறைவடையும் சந்தை இந்த வாரம் ஊரடங்கு காரணமாக, மதியம் 2 மணி வரை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குறைந்தளவு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். வெளிமாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க வராததால் சந்தைக்கு வந்த மாடுகளில் 40 விழுக்காடு மட்டுமே விற்பனையானது. விற்பனையாகாத மாடுகளை உரிமையாளர்கள் வாகனத்தில் ஏற்றி, அவர்களது ஊர்களுக்கு மீண்டும் கொண்டு சென்றனர்` எனத் தெரிவித்தார்.