கிரிக்கெட்டில் தலைசிறந்த அதிரடி தொடக்க வீரராக திகழ்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர். இவர், களத்தில் செட் ஆகிவிட்டால், எதிரணியின் பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு துவம்சம் செய்வார்.
சமீபத்தில் நடைபெற்ற 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் இவரது அதிரடியை எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. விளையாடிய 12 போட்டிகளில் 8 அரைசதம், ஒரு சதம் என 692 ரன்களை குவித்து, அதிக ரன்களை எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பியை மூன்றாவது முறையாக வென்றார்.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றுமுறை ஆரஞ்சு தொப்பி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, இவர் 2015இல் (562 ரன்கள்), 2017இல் (641 ரன்கள்) அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பி வாங்கினர்.
வார்னருக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் இரண்டு முறை ஆரஞ்சு தொப்பி பெற்றார். 2011இல் 608 ரன்களுடனும், 2012இல் 733 ரன்களுடனும் ஆரஞ்சு கேப் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.