ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால், எப்போதும் இருக்கும் உலகக்கோப்பை மீதான மோகம் இந்த முறை ரசிகர்களிடையே இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான். ஏன் தென்னாப்பிரிக்கா அணியுடனான இந்திய அணியின் முதல் போட்டிகூட பார்க்க சற்று மந்தமாகவே இருந்தது.
தற்போது அந்த வகையில், இந்தியா - ஆஸ்திரேலியா என இரண்டு ஜாம்பவான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால், இப்போதுதான் உலகக்கோப்பை மீதான ரியல் ஃபீவர் தொடங்கியுள்ளதாக கிரிக்கெட் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னதாக, இந்திய அணி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணியுடன் எதிர்த்து விளையாடிய போட்டிகள் குறித்து பார்ப்போம்.
ஒவ்வொரு முறையும் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றால், இந்திய ரசிகர்கள் எப்போதும் நமது அணிக்காக ஏகோபித்த ஆதரவு தருவது வழக்கம்தான்.
கபில் தேவ், சச்சின், கோலி என தலைமுறைகள் கடந்த சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றாலும், ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்திய அணியின் தலையெழுத்து மட்டும் மாறாமல் உள்ளது என்ற கசப்பான உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.
இதுவரை 11 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. அதில், 1983 முதல் 2015 வரை இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியதில், (1983,1987, 2011) என மூன்று முறை மட்டுமே இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஏனைய எட்டு முறையும் ஆஸி.யே வெற்றிபெற்றுள்ளது.
இதில், 1987, 1992, 1996, 2003, 2011, 2015 ஆகிய உலகக் கோப்பையில் இந்தியா- ஆஸ்திரேலியாவுடன் மோதிய போட்டி இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாது. 1987, 1992, 1996 இல் வெற்றிபெற வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணி, இறுதியில் தோல்வியை மட்டுமே தழுவியது. இதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணியின் அசத்தலான பந்துவீச்சுதான். தோல்வி அடையக்கூடிய போட்டியிலும் வெற்றிபெறுவதுதான் ஆஸ்திரேலிய அணியின் பாணி. இதனால்தான் அந்த அணி உலகக் கோப்பையில் கோலாச்சி இருந்தது.
மேற்கூறிய போட்டிகளை விட 2003இல் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த காயம்தான் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாக உள்ளது. அதற்கு இந்திய அணி 2011இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில்தான் பதிலடி தந்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் இவ்விரு அணிகள் 2015இல் அரையிறுதிப் போட்டியில் சந்தித்தது. இதில், இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் உலகக்கோப்பை கனவு அரையிறுதியோடு தவிடுபொடியானது.
இதைத்தவிர, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியா உடன் இருக்கும் பழைய கணக்கை இன்றையப் போட்டியில் இந்திய அணி தீர்த்துக்கொள்ளுமா என்று இந்திய ரசிகர்களின் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.