12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 18ஆவது லீக் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற இருந்து.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்ததால், ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதனால், போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குவதற்கு தாமதமாகியுள்ளது. இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில், தொட்டதெல்லாம் வெற்றி என்பதை போல, விளையாடிய போட்டிகள் அனைத்தும் வெற்றிகளை மட்டுமே சந்தித்து வருகின்றன.
நியூசிலாந்து அணி மூன்று வெற்றிகளுடனும், இந்திய அணி இரண்டு வெற்றிகளும் பதிவு செய்துள்ளது. இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி அனல் பறக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்னதாக, இந்திய அணி 1999 உலகக் கோப்பையில் இதே மைதானத்தில் (டிரெண்ட்பிரிட்ஜ்) நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இதனால், இன்றையப் போட்டியின் மூலம் இந்திய அணி அதற்கு பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருப்பதால் ஆட்டம் நடைபெறுமா அல்லது கைவிடப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.