கென்யா நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு நேற்றிரவு (ஏப்.22) வந்தது. அதில் வந்த சரக்கு பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது கென்யா நாட்டு தலைநகர் நைரோபியிலிருந்து சென்னையிலுள்ள ஒரு முகவரிக்கு ஐந்து பெரிய பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சல்களுக்குள் பூ ஜாடிகள், அலங்கார பூக்கள், ஏலக்காய், கிராம்பு போன்றவைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டனர். அப்போது, பேசியவர் `அந்த பார்சல்கள் எனக்கு வந்தவைகள் தான். நான் அது சம்பந்தமாக தற்போது விசாரணைக்கு எதுவும் வரமுடியாது.
நான் ஏரோநாடிக்கல் இன்ஜினியர், தற்போது பிரபலமான ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். பார்சலில் சந்தேகம் இருந்தால் நீங்களே பிரித்து பார்த்துவிட்டு எனக்கு டெலிவரி செய்யுங்கள்` என கூறியுள்ளார்.
இதனால், சற்று குழப்பமடைந்த சுங்கத் துறை அலுவலர்கள் அந்த பார்சல்களைப் பிரித்து பாா்த்தனர். அதனுள் மிகவும் விலை உயர்ந்த உயர்ரக கஞ்சா பொடிகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சா இலைகள் என மொத்தம் 47 கிலோ இருந்தன.
அவைகளின் சர்வதேச மதிப்பு 1 கோடிய 20 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், பார்சலில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு விரைந்தனர்.
ஆனால், அந்த முகவரியில் யாரும் இல்லாததால், பொறியாளரின் தொலைபேசி எண்ணை வைத்து அந்த நபரது வீட்டிற்குச் சென்றனர். அங்கு, 26 வயதுடைய இளைஞரிடம் விசாரணை செய்ததில், அவர் தான் பார்சலுக்கு உரிமையாளர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த அலுவலர்கள், இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் இதேபோல் பலமுறை போதைப் பொருளை பார்சலில் வரவழைத்து, அதை தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலுள்ள இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.