12ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி விசாகாப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ரிஷப் பந்த் 38 ரன்கள் அடித்தார். சென்னை அணியின் பந்துவீச்சில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 148 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியில் வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இதனால், சென்னை அணி 19 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எட்டியது. இதன் மூலம் இப்போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி எட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சென்னை அணியில் அதிகபட்சமாக, டு பிளசிஸ், வாட்சன் ஆகியோர் தலா 50 ரன்களை அடித்தனர். டெல்லி அணி தரப்பில் போல்ட், இஷாந்த் ஷர்மா, அக்சர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில், சென்னை அணி தனது பரம எதிரியான மும்பை அணியை எதிர்கொள்கிறது.