உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்ட சமூக பரவலை எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மிகத் தீவிரமடைந்து வருகின்ற கரோனா தொற்றின் காரணமாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
கரோனாவால் இதுவரை இந்தியாவில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 473 பேர் பாதிக்கப்படும், 4 லட்சத்து 9 ஆயிரத்து 790 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர். 19 ஆயிரத்து 309 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் 3000க்கும் மேற்பட்ட இடங்கள் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரை 95 லட்சத்து 40 ஆயிரத்து 132 பேரிடம் கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்தப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் 24 ஆயிரத்து 850 பேரிடம் பீட்டா/ நீயூக்ளிக் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. சோதனையில் 1,569 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுநோய் கடந்த மூன்று நாள்களாக 20,000 என்ற கணக்கில் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 314 நோயாளிகள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்டோரில் 60.77 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 613 இறப்புகளில் மகாராஷ்டிராவில் 295 பேர், டெல்லியில் 81 பேர், தமிழ்நாட்டில் 65 பேர், கர்நாடகாவில் 42 பேர், உத்தரப் பிரதேசத்தில் 24 பேர், குஜராத்தில் 21 பேர், மேற்கு வங்காளத்தில் 19 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 12 பேர், பிகாரில் ஒன்பது பேர், ஜம்மு-காஷ்மீரில் எட்டு பேர், ராஜஸ்தானில் ஏழு பேர், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய பகுதிகளில் தலா ஐந்து பேர், கோவா, ஜார்க்கண்டில் தலா இருவர், இமாச்சல பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது.