ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து மக்கள் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பல இடங்களில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பி வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் ஏதும் அணியாமல், சாதாரணமாக வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில், மாவட்ட பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் சமூக விலகலை பின்பற்ற வேண்டியது குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், 'பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டமாக குழுமி இருக்கக்கூடாது. பேருந்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாறாக துணி மற்றும் கைக்குட்டைகளை முகக்கவசங்களாகப் பயன்படுத்தக்கூடாது' என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகக்கவசமின்றி வந்தவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஏனெனில், பேருந்துகள் தற்போது குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், பேருந்து நிலையத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சிலர் செல்கின்றனர். இது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
அதேபோல் பேருந்து நிலையத்தில் செயல்படும் கடை உரிமையாளர்களிடம் கையுறைகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இனி, இதுபோன்று கையுறை பயன்படுத்தாமல் விற்பனை செய்தால், கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டது.