நாகை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், நாகை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனையில் சுய கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது, வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, தாலுகா அலுவலகத்தைப் பூட்டி, சுகாதாரத் துறையினர் கிருமிநாசினி அடித்து வருகின்றனர். இதனால் அன்றாட பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்கள் யார் யார் என கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக வெளியான தகவலால் சீர்காழியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.