சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி காவல் சரகம், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக புருஷோத்தமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புருஷோத்தமன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.