பெரம்பலூர் மாவட்டத்தில், கரோனா தொற்றால் ஏற்கெனவே 151 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 144 பேர் சிகிச்சை முடிந்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் எஞ்சியுள்ள ஏழு பேர் திருச்சி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர், வடக்கலூர் பாளையம், பரவாய் மேலமாத்தூர், செல்லியம்பாளையம், கூடலூர், கொட்டரை, பெண்ணகொணம், அத்தியூர், நாரணமங்கலம், கல்லை பெருமத்தூர், குடிக்காடு, கீரனூர், ஆலத்தூர், பெரம்பலூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 24 பேரும்; பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மேற்கண்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறிந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள், பெரும்பாலானோர் சென்னையிலிருந்து அண்மையில் பெரம்பலூர் வந்தவர்கள் என சுகாதாரத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.