கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் அண்டை மாநிலங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் ஊரடங்கு தளர்வை அடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் அதன் பரவல் வேகமடைந்து வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் ஈரோடு அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மேலும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காலை முதல் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான அலுவலர் பணியாற்றிவந்த அலுவலகம் மூடப்பட்டது, அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த மாதம் 25ஆம் தேதிக்குப் பிறகு கரோனா நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 518 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டும், 8 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.