ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதனால் இப்பகுதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரண்டு ஆண்கள் ஒரு பெண் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஏப்ரல் 22) உறுதி செய்யப்பட்டது.
தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்கள் செண்பகபுதூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்து வந்ததால், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரியைச் சேகரித்தனர்.
மேலும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் தெருக்கள் மற்றும் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்தோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த கரோனா பரவல் காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.