திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 800 பேர் வரை மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். குறிப்பாக, நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நகர் பகுதியில் வீடுகள் நெருக்கமாக அமைந்து இருப்பதாலும் மக்கள் நெருக்கமாக வசிப்பதாலும் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நகர் பகுதியில் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடத்தும் நிகழ்வு இன்று (ஜூலை 1) தொடங்கியது.
அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் இன்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தினர். அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர்.
அப்போது பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் சளி, இருமல் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டது. இந்த முகாமின் போது நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இதுபோன்று நகர் முழுவதும் மருத்துவ முகாம் நடத்த உள்ளதாக மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.