வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சின்ன கீச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வேண்டாமணி (51). இவருக்கு கடந்த வாரம் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
வேண்டாமணியின் மகன் ஜனார்த்தனன்(31). ரயில்வே ஊழியரான இவர், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் இறுதி சடங்குகள் செய்வதற்காக சொந்த ஊரான கீச்சக்குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்து வந்தபோது அந்த கிராமத்தினர் ஜனார்த்தனன் உடலை ஊருக்கு எடுத்து வரக்கூடாது என்றும், அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார் என கூறினர்.
இறந்தவருக்கு கரோனா இல்லையென அரசு மருத்துவமனை சார்பில் சான்று அளிக்கப்பட்டு இருந்தும், சடலத்தை கிராமத்திற்குள் எடுத்துவர அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன வேதனை அடைந்த ஜனார்தனின் உறவினர்கள் உடலை நேரடியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர். .
இடுகாட்டில் உறவினர்கள் பலர் இருந்தும் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் ஊராட்சி சார்பில் இரண்டு தூய்மை பணியாளர்களை மட்டுமே அனுப்பியுள்ளனர். இதனால் உடல் அடக்கம் செய்ய தாமதம் ஆவதை அறிந்த மேல்பாடி காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்ற காவலரும், அமரர் ஊர்தி ஓட்டுநர் இருவரும் சேர்ந்து தாமாக முன்வந்து ஜனார்த்தனன் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
உயிரிழந்த ஜனார்த்தனனுக்கு மனைவி மற்றும் ஆறு மாத கைகுழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.