நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய லாரி ஓட்டுநர், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி டாஸ்மாக் குடோனுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபோது, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த வருவாய்த் துறை அலுவலர்கள், சம்பவ இடத்துக்கு வந்து அவரைத் தனிமைப்படுத்தினர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அலுவலர்கள் கூறுகையில், "லாரி ஓட்டுநர் கரோனா பாதிப்பால், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா உறுதியானதையடுத்து, வாகனத்திலிருந்து சரக்கு இறக்கவில்லை. வாகனத்தில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.