ஈரோடு மாவட்டம், முழுவதும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தற்போது வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் பணிபுரியச் சென்ற பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டுள்ளனர்.
இதனால், கடந்த சில நாள்களாக குறைந்திருந்த தொற்று பாதிப்பு மாவட்டம் முழுவதும் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால், இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 35-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 902 வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த சில நாள்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாநகராட்சிக்குள்பட்ட ராஜாஜிபுரம் குடியிருப்பு பகுதியில் இன்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஏனைய பகுதிகளுக்கு நோய்ப்பரவலைத் தடுப்பதற்குரிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களில் ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: தண்டையார்பேட்டையில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது