மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தின் 2ஆவது தளத்தில் என்.ஹெச்.45 ஏ தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நில எடுப்பு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் என்பவர் பணியில் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் சென்னை சென்றவர் உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் இன்று (செப்டம்பர் 8) ஒருநாள் மூடப்பட்டது. அங்கு பணியில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதேபோல் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் மார்கெட்டிங் நிர்வாகியாக பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு நேற்று (செப்டம்பர் 7) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை தபால் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பூட்டப்பட்டது. தொடர்ந்து, நிலையத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவந்தது. பின்னர் அவர்கள் சுகாதாரத் துறையினரை அணுகி தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டனர். அதில் பென்னாகரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காவல் நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.