திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,762 ஆக இருந்தது. இன்று புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1803 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 615 ஆக உள்ளது.
பெங்களூரிலிருந்து வந்த நான்கு பேர், சென்னையில் இருந்து இரண்டு பேர், கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், மும்பை ஆகிய ஊர்களிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவிலிருந்து 9 பேர், நோயாளியிடம் தொடர்பில் இருந்த 7 பேர், இரண்டாம் கட்ட தொற்று பெற்ற 7 பேர் உள்ளிட்ட மொத்தம் 41 பேருக்கு இன்று நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம், காட்டாம்பூண்டி, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், ஆக்கூர், ஆரணி, போளூர், பெரணமல்லூர், தெள்ளார், துரிஞ்சாபுரம், செங்கம், வேட்டவலம், வந்தவாசியில் 11 பேர், திருவண்ணாமலை நகராட்சி 2 பேர் உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 41 பேருக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள், புறநோயாளிகள் பிரிவில் பரிசோதனை செய்பவர்கள் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், இனிவரும் காலங்களில் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம்!