மாநிலங்களவை தேர்தலையொட்டி குஜராத்தில் அரசியல் பதற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களை தொடர்ந்து மற்றவர்களும் ராஜினாமா செய்யலாம் என்ற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.
182 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவையில் பாஜகவிற்கு மொத்தமாக 103 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வெல்ல ஒரு வேட்பாளருக்கு 34 வாக்குகள் தேவை என்ற சூழலில், ஜூன் 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகிய பின்னர் இது இன்னும் பரபரப்பானது.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 65 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் ஏற்கனவே வெவ்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், சவுராஷ்டிராவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவை ராஜ்கோட்டில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்திருப்பதாகவும், மற்றொரு குழு குஜராத்தில் ஆனந்த் அருகே வைக்கப்பட்டிருப்பதாவும் நேற்று தகவல் வெளியானது.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்ற 26 எம்.எல்.ஏ.க்களை ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் அமைந்துள்ள வைல்ட்விண்ட்ஸ் என்ற சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் அங்கு பாஜக தலையீட்டிலிருந்து எம்.எல்.ஏக்களைப் பாதுகாப்பாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமென அக்கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.
குஜராத்தில் மொத்தமுள்ள நான்கு மாநிலங்களவை பதவிகளில், பாஜகவுக்கு மூன்று, காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றென கருதப்பட்டு வந்த நிலையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி நட்பினடிப்படையில் காங்கிரஸை ஆதரித்தால் இந்த எண்ணிக்கை மாறும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும்.