திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருபவர்களால், கரோனா தொற்று நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலும் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சட்டத்திற்குப் புறம்பாக மாவட்டத்திற்குள் நுழைபவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் உள்ள 27 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட எல்லைகள் அனைத்திலும் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சத்யானந்தன் தலைமையில், விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையான எரும்பூண்டி கூட்ரோடு அருகே அனைத்து வாகனங்களும், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க:குமரியில் போலி இ-பாஸ்களால் கிடுகிடுவென உயரும் கரோனா எண்ணிக்கை!