திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கத்தில், மாவட்ட அளவில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர். கே. பாஸ்கரன், மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விரிவாக விளக்கினார். பின்னர் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும், குறிப்பாக 22 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் காலை மற்றும் மாலை வேளைகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதையும், கட்டுபாட்டு பகுதிகள், அனைத்து தீவிர கண்காணிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அனைத்து சுகாதார பணிகளும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து சளி, காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்டவைகளைக் கண்டறிந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசங்கள் அணிய செய்வது, கைகளில் தடவக் கூடிய கிருமிநாசினிகளைப் பயன்படுத்த நடவடிக்கைகளை எடுக்க அனைத்து அலுவலர்களையும் அறிவுறித்தினார்கள்.
மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அனைத்து பகுதியிலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களைப் பெற்று உரிய மருத்துவ அலுவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறித்தினர். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள், வட்டாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.