சுதந்திர போராட்ட களத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பணியாற்றினர். அவர்களில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமியும் ஒருவர்.
தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டிருந்த தியாகி ரங்கசாமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐ.என்.ஏ என்றழைக்கப்படுகின்ற இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்று சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இதனிடையே, சொந்த ஊரில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்த ரங்கசாமி தன்னுடைய கூரைவீடு இடிந்து போனதாலும் பத்து வருடங்களுக்கு முன்பே அவரது மனைவி இறந்து விட்டதாலும் தன்னுடைய மூத்த மகளான செல்ல பாப்பு வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் தவறி விழுந்ததால் நடக்க முடியாமல் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் அவர் அழைத்துவரப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த தியாகி ரங்கசாமி நேற்று (செப்டம்பர் 16) இரவு காலமானார். இதையடுத்து, தியாகி ரங்கசாமியின் உடல் தனது சொந்த ஊரான வரகு பாடி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வரகு பாடி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.