நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள குடும்பங்களை அப்புறப்படுத்தி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) பாதிக்கப்பட்ட இடங்களான எமரால்டு, வ.உ.சி நகர், இந்திரா நகர், பெரியார் நகர், வினோபாஜி நகர், காட்டு குப்பை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 95 குடும்பங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முன்னதாக மிகவும் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா 4,500 ரூபாயை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் துறை கோட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து, பணிகள் தொடங்கப்படும். அடுத்த கனமழை தொடங்கும் முன் இந்த பணிகளை முடிக்க துரிதமாக பணிகள் தொடங்கும்" என்றார்.