தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மூலமாக அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், பள்ளி இடைநின்ற வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது.
மேலும் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று நாள்கள் முட்டை வழங்கப்படுகிறது. கரோனா தொற்று பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்கள் மார்ச் 17ஆம் தேதி முதல் மூடப்பட்டு மதிய உணவிற்கு பதிலாக அரிசி பருப்பு, முட்டையினை ஜூன் 30ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக பயனாளிகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களால் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் செயல்பட்டுவரும் ஆயிரத்து796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 89ஆயிரத்து 306 குழந்தைகள், 12ஆயிரத்து735 கர்ப்பிணிகள், 12ஆயிரத்து327 பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை அனுமதிக்கப்பட்ட அளவிலான சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் முன்பருவ கல்வி பயிலும் 49ஆயிரத்து799 குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு அரிசி 80 கிராம் என்ற விகிதத்தில் 15 நாள்களுக்கு 1.200 கி.கி, பருப்பு 80 கிராம், முட்டை 6 என்பதன் அடிப்படையில் உலர் உணவுப்பொருள்களாக அங்கன்வாடி பணியாளர்களால் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது.
அதன்காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து, கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் பேணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் உணவுப்பொருள்கள் பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்கும் பொருட்டு ஜூலை 1ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி வட்டாரத்திற்குள்பட்ட பையனப்பள்ளி கிராமத்தில் உலர் உணவுப்பொருள்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அனுமதிக்கப்பட்ட அளவிலான அரிசி, பருப்பு, முட்டை, சத்துமாவு அடங்கிய தொகுப்பை பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கியதை பார்வையிட்டு தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அரசால் அளிக்கப்படும் உணவுப்பொருள்களை தாமதமின்றி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 'ஆதரவற்றோருக்கு உணவு, உடை; இறந்தால் நல்லடக்கம்' - நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஓய்வுபெற்ற எஸ்ஐ