தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் 25.6.2020 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனைஅடைந்தேன்.
இவர் திருச்செந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தக்காராகவும் திறம்பட பணியாற்றியவர். இவர் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். திருச்செந்தூர் தொகுதி மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் அவர்களை, இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.