கிரிக்கெட் ரசிகர்களால் யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படுவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெயில். 40 வயதான இவர், நடைபெற்றுவரும் உலகக் கோப்பை தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில், ஐந்து பவுண்ட்ரி, ஒரு சிக்சரும் அடங்கும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது 36ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள கெயில் இதுவரை 1632 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகமான ரன்களை குவித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். இதனால், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா படைத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையையும் காலிசெய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர்கள்:
- கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1632 ரன்கள், 36 போட்டிகள்
- சங்ககரா (இலங்கை) - 1625 ரன்கள், 44 போட்டிகள்
- விவ் ரிச்சர்ட்ஸ் ( வெஸ்ட் இண்டீஸ்) - 1619 ரன்கள், 36 போட்டிகள்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 1598 ரன்கள், 39 போட்டிகள்
- ஜெயவர்தனே (இலங்கை) - 1562 ரன்கள், 47 போட்டிகள்