மவுண்ட் எவரெஸ்ட் ஒலிம்பிக் டார்ச் ரிலே அணியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சீன மரபு தற்காப்புக் கலைக் கழகத்தைச் சேர்ந்த போராளிகள் அடங்கிய ஐவர் குழு ஒன்றை, லாசாவில் ஆய்வுப் பணிக்காக கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று சீன அரசு அனுப்பியதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ராணுவ செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சீன அரசின் செய்தித்தாளில் சீனாவின் திபெத் தளபதி வாங் ஹைஜியாங் எழுதிய கட்டுரை ஒன்றில், "என்போ வீரக்கலை பயிற்சி குழுமத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைசிறந்த வீரர்களால், துருப்புக்களின் பலம் கூடியுள்ளது. படைதிறன் வலிமையைப் பெரிதும் உயர்ந்துள்ளது" எனக் கூறியிருந்தது இங்கே கவனிக்கத்தக்கது. எவ்வாறாயினும், இந்த தற்காப்புக் கலை வீரர்களுக்கும் கல்வான் மோதலுக்கும் தொடர்பிருக்கிறது என அவர் உறுதிப்படுத்தவில்லை.
சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதியன்று இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் இந்தியத் தரப்பில் உயர் அலுவலர் உள்ளிட்ட 20 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்தனர். சீனத் தரப்பில், ஏற்பட்ட இழப்புகள் குறித்து சீனா எதுவும் தெரிவிக்கவில்லை.
இது 45 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான கொடூரமான வன்முறையாக, சர்வதேச நாடுகள் காண்கின்றன. இந்த மோதலுக்குப் பிறகு, டெல்லி மற்றும் பெய்ஜிங் ராஜதந்திரிகள் இந்தியா - சீனா ராணுவ மட்டத்திலும், தூதரக மட்டத்திலும் இருதரப்பும் பேசி, இந்த பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள முயலவேண்டும்" எனக் கூறி வருகின்றனர்.