இந்தியா - சீனா எல்லை பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் ஜூன் 15ஆம் தேதி இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட இந்திய படை வீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேலும் சில வீரர்களையும் கைது செய்து, அவர்களை மரபுசாராத வகையில் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர். கிழக்கு லடாக்கில் ரோந்துப் பணியிலிருந்த எண் 14ஆம் வரிசையைச் சேர்ந்த சீன ராணுவத்தினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
நள்ளிரவில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இத்தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 28 அன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர் இழந்த ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்த குடும்பங்களின் தியாகம் 'வணங்கத்தக்கது' என்று கூறினார்.
சீனத் தரப்பில் இதுவரை ஒரு சில அலுவலர்கள் மட்டுமே இறந்ததாக அந்நாட்டு அரசு கூறி வந்தாலும், அங்கே 43 பேர் உயிரிழந்ததாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், இந்த சம்பவத்தில் தங்களது தரப்பில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை சீனா இன்னும் வெளியிடவில்லை.
இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், " கல்வானில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதால், நாட்டிற்காக தனது வீரர்கள் செய்த இறுதி தியாகத்தை அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை என்றே தெரிகிறது.
மோதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த சீன குடும்பங்களை சீன அரசு அச்சுறுத்துகிறது. முதலாவதாக, தன் பக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்க மறுத்த சீன அரசானது, இப்போது வீழ்ந்த வீரர்களுக்கு உரிய நல்லடக்க மரியாதை செய்யவும் மறுத்துவிட்டதாக அறிய முடிகிறது.
இது தலைநகர் பெய்ஜிங்கில் அமர்ந்திருப்போரின் தவறு. கிழக்கு லடாக்கில் அறமற்ற விரிவாக்கத்தை மேற்கொண்டபோது, சீனா சந்தித்த கருப்பு அத்தியாயத்தை மறைக்க மோதலில் உயிரிழந்த சீன வீரர்களுக்கு புதைகுழி விழாக்களை கூட கட்டுப்பாடுகளுடன் நடத்த சீன சிவில் விவகார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை சீன அரசு ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தினாலும், இந்தப் புதிய விதிகள் மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வை மட்டுப்படுத்துவதற்கே வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அமெரிக்க மதிப்பிடுகிறது.
சீன விடுதலை ராணுவ வீரர்களுக்கான கல்லறைகளின் சர்வதேச சமூக ஊடகங்களில் பரவினால், அவை நாட்டினுள் அரசுக்கு எதிரான உணர்வுகளை மேலும் தூண்டக்கூடும் என்று சீனா அஞ்சுகிறது.
எனவே சீன தரப்பில் எல்லை மோதலில் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் செயல்பாடுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.