திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டு பேசுகையில், "மாவட்டத்தில் சில தொழிற்சாலைகளில் உள்ள முதலாளிகள் தங்களின் சுய லாபத்திற்காக குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
அவர்களை சட்டத்தின் மூலம் இரும்புக்கரம் கொண்டு, அடக்கி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
பின்னர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1994ஆம் ஆண்டு கொண்டு வந்த அனைவருக்கும் கட்டாய ஆரம்ப கல்வித் திட்டம் ஆகியவை தான், அனைத்து பெற்றோர்களிடமும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணத்தைத் தோன்ற வைத்தது.
இதனால், தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. குழந்தைத் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் தற்போது, குழந்தை வளரின பருவத் தொழிலாளர்களைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணிக்குச் செல்லக்கூடாது என்று இருந்ததை 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவித அபாயகரமானப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது, என தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்" என்றார்.
மேலும் இவ்விழாவில் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள், துண்டு பிரசுரங்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை வெளியிட்டனர்.
பின்னர் அரசியலமைப்பு விதிகளின் கீழ், கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவிதப் பணிகளிலும் அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், பல அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.