உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியான செங்கல்பட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்தாலும் செங்கல்பட்டு, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பரவல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த மதுராந்தகம் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் பணி புரிந்துவந்த அலுவலர் மருத்துவர் சுகுமாரன் நேற்று (ஜூலை 3) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்துள்ள மதுராந்தகம் அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்த மருத்துவர் எஸ்.சுகுமாரன் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிற்கு உள்ளாகி, தனியார் மருத்துவமனையில் 20.6.2020ஆம் தேதி முதல் 30.6.2020ஆம் தேதி வரை சிகிச்சைப் பெற்று வந்தார்.
இவருக்கு ஏற்கனவே நீரிழிவு, ரத்த கொதிப்பு இருந்ததாகவும், கரோனா பாதிப்பு காரணமாக தற்போது நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 30 அன்று சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனிடையே சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூலை 3) உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மருத்துவர் சுகுமாரனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவர் சுகுமாரனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடன் பணியாற்றிய மருத்துவர் சுகுமாரனின் குடும்பத்திற்கு அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.