குமரி மாவட்டம், விவேகானந்தபுரத்தில் பல ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த, சார்நிலை கருவூலம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் ரூ.80.52 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டது. இந்த சார்நிலை கருவூலத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி அழைப்பின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி சார்நிலை கருவூலத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்.பி., குமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் இணைந்து குத்து விளக்கேற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் .மு. வடநேரே, பயிற்சி ஆட்சியர் ரிஷ்ஷத், மாவட்ட கருவூல அதிகாரி பெருமாள், கன்னியாகுமரி சார்நிலை கருவூல அதிகாரி நம்பிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.