இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பி.ஜான் கென்னடி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
செய்தியாளர் ஜான் கென்னடியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அதற்கான மருத்துவ செலவினையும், உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
அதனடிப்படையில், உயிரிழந்த செய்தியாளர் ஜான் கென்னடியின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அச்சு மற்றும் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் செய்திகளை சேகரிக்கச் செல்லும் போது மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.