கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர். இருப்பினும், குணமடைந்தவர்களின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மே 8ஆம் தேதி முதல் நேற்று (ஜூலை 12) வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 16 ஆயிரத்து 106 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதில் 10 லட்சத்து எட்டாயிரத்து 805 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று 402 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அவற்றில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 56, தண்டையார்பேட்டை 45, கோடம்பாக்கம் 41 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த 402 மருத்துவ முகாம்களில் மொத்தம் 17 ஆயிரத்து 745 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில், 1,683 நபர்கள் அறிகுறி இருந்ததால், அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.