சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் காமராஜர் சாலையில் வளர்ப்புப் பிராணிகள் அங்காடியை சொந்தமாக நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி, இவரது கடைக்கு 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது சிறுமியை மணிகண்டன் மிரட்டி, கயிற்றால் கைகளைக் கட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் நடந்தது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தால், கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
பின்னர் இதேபோல் கடந்த 30ஆம் தேதி, சிறுமியின் வீட்டிற்குச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் அடையாறு வெட்டுவாங்கன்னி பகுதியைச் சேர்ந்தவர், பட்டாணி முத்து (75). இவர் கடந்த 29ஆம் தேதி அருகிலிருந்த மளிகை கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அதே கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வரவே, பட்டாணி முத்து மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து பட்டாணி முத்துவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோன்று வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவல்லி (41). இவரது 14 வயது மகள் கடந்த 2ஆம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக 9ஆம் தேதி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (19) என்பவர், 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், கடந்த 2ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் பலமுறை 14 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் தலைமறைவாக இருந்த பாலாஜி மற்றும் 14 வயது சிறுமி பெரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், மகளிர் காவல் துறையினர் விரைந்து பாலாஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் 14 வயது சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் கடந்த ஆண்டைவிட 51 வழக்குகள் குறைந்து உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது ஊரடங்குத் தளர்வினால், மீண்டும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, சென்னையில் ஒரே நாளில் மட்டும் பல்வேறு இடங்களில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ், காவல் துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.