சென்னை அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மலர்விழி( 22). இவர் நேற்று(ஜூன் 25) தனது வீட்டருகே உள்ள ஜெய் நகர் தெருவில் கடைக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மலர்விழியின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
பின்னர் உடனே மலர்விழி திருடன் என்று கூச்சலிடவே அருகிலிருந்த பொதுமக்கள், வாகனத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் வாகனத்தை விட்டு ஒரு நபர் தப்பியோடி உள்ளார். ஆனால் செல்ஃபோனை பறித்து சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அந்த நபரை சி.எம்.பி.டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கும் போது அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஆகாஷ்(22) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய நபர் சூளைமேட்டை சேர்ந்த அப்பு என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ஆகாஷிடமிருந்து திருடப்பட்ட செல்போன், இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேசமயம் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.