இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”தமிழ்நாடு முழுவதும் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ள அனுமதி வாங்கி, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. அதில் முக்கியமாக வைகை, காவிரி, பாலாறு ஆகிய ஆறுகளில் அதிகப்படியாக சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது.
இதனால் ஆறுகளில் தண்ணீர் செல்வதற்குத் தடையாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதுதொடர்பாக அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் வறட்சி மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதித்துள்ளது. சவுடு மண் அள்ளுவதற்கு அரசிடம் அனுமதி வாங்கி சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுகிறது. அரசிடம் அனுமதி வாங்கி நடத்தப்படும் மணல் குவாரியை அலுவலர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என்பது விதி உள்ளது. ஆனால், அலுவலர்கள் எவ்வித ஆய்வும் நடத்துவதில்லை. எனவே தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக்கை (TASMAC) போல் மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் (TAMSAC) தொடங்க வேண்டும். அதன் மூலம் மணல் விற்பனை நடைபெற வேண்டும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலங்களில் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ளுவதற்குத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சட்ட விரோத மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரை சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா? - தணிகாசலத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி