தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பைச் சேர்ந்த செல்லச்சாமி என்பவர் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எனது தொழில் சம்பந்தமாக, கோவில்பட்டி காவல் நிலையத்தில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக உள்ள சங்கர் என்பவர் தனக்கு ரூ. 50 ஆயிரம் தர வேண்டியிருந்தது.
அத்தொகையினை நான் அவரிடம் கேட்ட போது, அவர் ரவுடிகளை வைத்து மிரட்டி வந்தார். இதுகுறித்து, கோவில்பட்டி டி.எஸ்.பி.யாக இருந்த கலைக் கதிரவனிடம் புகார் செய்தேன். அவரும் எஸ்.ஐ. சங்கருக்கு ஆதரவாக, என்னை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் நான் தொடர்ந்து எனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு வலியுறுத்தி வந்தேன்.
இதையடுத்து மந்தித்தோப்பு - ஊத்துப்பட்டி விலக்கில் இரும்புக் கடை வைத்துள்ள பூனை ராசு என்ற ராஜபாண்டி என்பவரும், அவரது நண்பர்களும் எஸ்.ஐ.க்கு ஆதரவாக மிரட்டினர். இதுகுறித்து நான் மீண்டும் புகார் அளித்தேன். இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஐ.சங்கரின் கூட்டாளிகள் பூனை ராசு தலைமையில் வந்த சிலர், காரில் வந்த என்னையும், எனது மனைவி, மகன், மகள் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்து எனது நண்பர் பாலமுருகன், அவரது மனைவி ஆகியோரைத் தாக்கினர்.
மேலும், எனது வீடு, இரு சக்கர வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். அப்போது, காருக்குள் பதுங்கி இருந்ததால் நானும் எனது மனைவியும் உயிர் தப்பினோம். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தோம். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை காவல் துறையின் பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இம்மனு நீதிபதி பொங்கியப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது இவ்விவகாரம் தொடர்பாக, இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி., கோவில்பட்டி டி.எஸ்.பி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.