சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த லட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில்," சிவகங்கை மாவட்டத்தில், இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் சவுடு, கிராவல் மண் எடுப்பதற்காக ஏராளமான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
300 கன மீட்டர் அளவிற்கு சவுடு அல்லது கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்று, அதனைப் பயன்படுத்தி 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கனமீட்டர் மணல் எடுக்கப்படுகிறது.
கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் இதுபோல அனுமதி பெற்று அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் தனக்கு வேண்டியவர்கள் மூலமாக இந்த உரிமங்களை வழங்குகிறார்.
இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, 2020 டிசம்பர் வரை சவுடு, கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு தமிழ்நாடு கனிமவளத் துறை செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும், மனுதாரர் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கூடுதல் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.