டெல்லி: சீனப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்ற குரல் நாட்டில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, இங்கு தகவல் சாதனங்கள் சந்தையில் பெரும் பங்கு வகித்து வரும் சீன நிறுவனங்களை புறம் தள்ள பிற நிறுவனங்களுக்கு சரியான நேரமிது. சீனா அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த சாம்சங், ஆப்பிள், நோக்கியா, ஏசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தங்கள் பொருள்களை இந்தியச் சந்தையில் முன்னிலைப்படுத்த தக்க சமயம் இது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இங்கு சந்தர்ப்பவாதமாக தோற்றமளிப்பதும், சீன விரோத உணர்வில் சீன தயாரிப்பு பொருள்களை புறம் தள்ளுவதும் அல்ல பிரச்னை. உயர் ரக தகவல் சாதனங்களை சீன நிறுவனங்கள் வழங்கும் இணையான விலையில் பிற நிறுவனங்கள் தர இயலுமா என்பது தான் தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி என வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சீன பொருள்களுக்கு எதிராக ஓங்கும் குரல்: நிகழ்வை கைவிட்ட ஒப்போ!
மேலும், சீனாவில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்நாட்டில் துரிதமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி செய்தால் மட்டுமே உள்நாட்டில் தேவைக்கேற்ப தகவல் சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும்.
அப்படி உற்பத்தி செய்யும் பட்சத்தில்தான், நுகர்வோருக்கு சீன தயாரிப்புகளுக்கு இணையான மலிவு விலை உயர்தர தகவல் சாதனங்களை வழங்க முடியும்.
சில தினங்களுக்கு முன் சீனாவைச் சேர்ந்த ஒப்போ நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட் போன் வெளியீட்டு நிகழ்வை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.