கரோனா ஊரடங்கு உத்தரவின்போது ஈரோடு மாவட்ட நீர் நிலைகள் தூய்மையாக இருந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு தளர்வுக்குப் பிறகு தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டதற்கு பிறகு நீர் நிலைகள் மாசடைந்த நிலையில் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு வீரப்பம்பாளையம் அருகே வெட்டுக்காட்டு வலசுப் பகுதியில் செயல்படும் தனியார் சாயத் தொழிற்சாலை சுத்திகரிக்காத சாயக் கழிவு நீரை வெளியேற்றுவதால் நீர் நிலைகள் மாசடைவதாக மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட பொறியாளர் உதயகுமார் தலைமையிலான அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் சுத்திகரிக்காத சாயக்கழிவு நீரை நீர் நிலைகளில் திறந்து விடபபட்டது கண்டறியப்பட்டது.
அதனடிப்படையில், சாய தொழிற்சாலையில் மின்னிணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டதுடன், ஆலையின் உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனிடையே, தொடர்ந்து நீர் நிலைகளில் சாயக்கழிவு நீர் திறந்து விடப்படும் சாயத் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாசுக்கட்டுபாட்டு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை - செங்கல்பட்டு - திருச்சி இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு