திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடகரைப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி பகுதியிலிருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பில் காளையை விவசாயத் தொழில் செய்வதற்காக விலை கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று(ஜூலை 6) கிராமத்தின் அருகே உள்ள கோயிலில் காளைக்கு பூஜை செய்வதற்காகக் கொண்டு சென்ற போது, உமாசந்தர் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கியதில், காளை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது .
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காளையை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கம்பி அறுந்து விழுந்ததை கண்டுகொள்ளாமல் இருந்த நிலத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து மின் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அறுந்து விழுந்த மின் கம்பியை சீர் செய்யும் பணி நடைபெற்றது.