திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் கலைக் கல்லூரியில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவ மாணவிகள் அதிகப்படியானோர் கிராமப்புறத்தில் இருந்தே வந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கரோனா நேரம் என்பதால் கடந்த ஐந்து மாதக் காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் மற்றும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தற்போது, பாரதிதாசன் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இடைக்கால தேர்வு நடைபெறுகிறது.
அந்த தேர்வினை மேற்கொள்ள முடியாமல் கிராமப்புற மாணவர்கள் தங்களுக்கு போதிய வசதி இல்லாததால் இணையவழித் தேர்வினை எழுதுவதற்காக கல்லூரிக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்தனர்.
அப்போது, தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் அனுமதி வழங்காததால் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள சாலையோரங்கள், பெட்டிக் கடைகளின் வாசல்களில் அமர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரையும் தேர்ச்சி என அரசாணை வெளியிட வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.