இங்கிலாந்தில் 12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளன. இதில், பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பெயர் பட்டியலை கடந்த மாதமே அறிவித்தன. அந்த வகையில், கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலம் தடை பெற்ற ஆஸி. வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றனர்.
இதனால், அவர்களது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தத் தொடருக்கான பிரத்யேக ஜெர்சியில் தோற்றம் அளித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில், டேவிட் வார்னரின் புகைப்படத்தை இங்கிலாந்து பார்மி ஆர்மி ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி ஜெர்சியில் தோற்றம் அளித்த வார்னரின் ஜெர்சியில் ஆஸ்திரேலியா என்ற பெயருக்கு பதிலாக, ஏமாற்றுக்காரர் என்று எடிட் செய்து அந்தப் புகைப்படத்தை பார்மி ஆர்மி ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
2018இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்க்ராஃப்ட் ஆகியோர் சாண்ட் பேப்பரை வைத்துதான் பந்தை சேதப்படுத்தினர். இதனால், சாண்ட் பேப்பரை மையமா வைத்து, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயான், வேகப்பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் ஆகியோரையும் பார்மி ஆர்மி ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். அவர்களது கையில் கிரிக்கெட் பந்திற்கு பதிலாக சாண்ட் பேப்பர் வைத்திருப்பது போல் எடிட் செய்து புகைப்படத்தை வெளியிட்டனர்.
தற்போது இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போதும், பார்மி ஆர்மி ரசிகர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்க்ராஃப்ட், பயிற்சியாளர் டேரன் லீமன் ஆகியோரையும் கிண்டல் செய்தனர்.