ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு மாவட்டப் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "கூட்டுறவு வங்கிகளைத் தனியார்மயப்படுத்த ஆரம்பக்கட்டப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு மாநில அரசு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
மாநில அரசின் உரிமைகளைப் பறிக்க முடிவெடுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை மாநில அரசு எதிர்த்திட வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியோடு 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து ஒரே வங்கியாக தமிழ்நாடு வங்கி என்று உருவாக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்ட நிலையிலும்கூட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பணியாற்றிவருகின்றனர். வணிக வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம், காப்பீடு போன்றவை போல கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.