இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 9ஆவது லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இக்பால் 24 ரன்களிலும், சவுமியா சர்கார் 25 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், 13.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஷ்ஃபிகுர் ரஹிம், ஷிகப்-அல்-ஹசன் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தது. இந்நிலையில், ரஹிம்- ஷகிப் இடையே ஏற்பட்ட குழப்பத்தில் ரஹிம் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். இருப்பினும், மறுமுனையில் ஷகிப் அதிரடியாக ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
68 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் என 64 ரன்கள் எடுத்திருந்தப்போது ஷகிப் காலின் டி கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனால், வங்கதேசம் அணி 30.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஷிகப்-அல்-ஹசனைத் தொடர்ந்து வந்த மஹமதுல்லாஹ், முகமது சைஃப்வுதீன், முகமது மீதுன், மேகிடி ஹாசன், மொர்டோசா ஆகியோர் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வங்கதேசம் அணி 49.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரி நான்கு, டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.