அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்ப்பதற்கு ஆண்டு தோறும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வழிமுறைகளின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ளும்.
அதனடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். இதனைத் தொடர்ந்து 537 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை குறைத்து அறிவிக்கப்பட்டது.
இந்த உட்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மையம் மண்டல வாரியாக, கல்லூரிகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது 557 தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் பாடப்பிரிவு தொடக்கப்பட்ட ஆண்டு, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 2018-19ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, 2019-20ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இடங்கள் குறைக்கப்பட்ட கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கையால் குறைக்கப்பட்டதா அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் அனுமதி அளிக்காததால் குறைக்கப்பட்டதா என்ற விபரமும் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணையதளத்தில் சென்று தாங்கள் சேர உள்ள கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தெரிந்துகொண்டு, பின்னர் சேர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.