#HBDAnna111 வெறும் 23 ஆண்டுகள் கட்சி நடத்திய அந்த ஐந்தரை அடி மனிதன் பயணித்த பாதையில்தான் அடுத்த ஐம்பதாண்டு கால தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பயணித்துக்கொண்டிருக்கின்றன. அவர் திமுகவை தோற்றுவித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மட்டும் அல்ல. தனது பெயரைப்போலவே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அண்ணாவாகவே திகழ்ந்தார். தமிழ்நாட்டின் தலையாய சிக்கல்களை உணர்ந்து, அதற்கான தீர்வுகளை தன்னால் முடிந்தளவு சட்டமாகவே நிறைவேற்றினார்; காலம் நிறைவேற்றவிடாமல் தடுத்த சிக்கல்களுக்கான தீர்வுகளையும் தந்தவர் அண்ணா.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-11.jpg)
'தமிழ்நாடு' தந்த அண்ணா
தமிழ்நாட்டை அண்ணா ஆண்டது இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவுதான். ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மூன்று முக்கிய சட்டங்களை இயற்றினார். அந்த மூன்று சட்டங்கள்தான் தமிழ்நாட்டை என்றென்றும் பிற மாநிலங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது.
60 ஆண்டுகளுக்கு முன், பிற மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு உரிய பெயரை சூட்டுவதில்கூட தடுமாறிவந்தனர். இந்திய துணைக் கண்டத்தின் நடுவில் இருப்பதால் மத்தியப் பிரதேசம் (இந்தியில் மத்தி என்றால் நடுவில்; பிரதேசம் - பகுதி), உத்தரப் பிரதேசம் (உத்தர் - வடக்கு; பிரதேசம் - பகுதி) என தங்கள் மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் உரிய பெயரைக்கூட தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தன. அப்போது 'தமிழ்நாடு' என்று தன் தாய் மண்ணுக்கு பெயர் சூட்டி தனித்துவமாக மிளிர்ந்தார் அண்ணா.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-7.jpg)
மதராஸ் மாகாணம் என்றிருந்த இந்த மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என திமுக, திக உள்பட பல முக்கிய கட்சிகள் வலியுறுத்திவந்தன. ஆனாலும் அப்போது ஆட்சியிலிருந்த (1952-1967) காமராஜர் உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களும் அதைத் தொடர்ந்து மறுத்தே வந்தனர்.
இது குறித்து, நாடாளுமன்றத்தில் ஒருமுறை நடந்த விவாதத்தின்போது, 'எதற்காக நாட்டிற்குள் இருக்கும் ஒரு குறுகிய இடத்திற்கு தனியாக நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்' என வலியுறுத்துகிறீர்கள் என்று எதிர் தரப்பு கேட்க, அதற்கு சற்றும் தாமதிக்காமல் 'இது குறுகிய இடம் அல்ல; கூர்மையான இடம்' என்று பதிலளித்தார் அண்ணா. அவர் முதலமைச்சராக இருந்தபோதே, 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் மதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியது.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-2.jpg)
இந்திக்கு இடமில்லை
இந்தி ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை ஆணித்தரமாக மத்தியில் உள்ளவர்களுக்கு எடுத்துரைக்க இரு மொழிக்கொள்கையை சட்டப்பேரவையில் அவர் நிறைவேற்றினார்.
1960-களில் ஒருமுறை இந்தி திணிப்பு குறித்து அண்ணா உரையாற்றுகையில், "1935- 36ஆம் ஆண்டுகளில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது. அப்போது, சென்னையில் உள்ள முக்கிய சாலையில், தமிழ் கொடியைத் தோள்களில் தாங்கிய இளைஞர்கள் இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்டுக்கொண்டு வந்தார்கள். வந்தார்கள் என்று நான் இறந்த காலத்தில் சொன்னதால் இப்போது வரமாட்டார்கள் என்று யாரும் கருத வேண்டாம்" என்று முழங்கினார் அண்ணா. சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்திக்கு எதிராக அண்ணா விடுத்த இந்த அறைகூவல் என்பது அந்த காலத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியது இல்லை. இனிவரும் காலங்களில் இந்தி திணிக்கப்பட்டால், தமிழ்நாடு எப்படி எதிர்கொள்ளும் என்பதை தெளிவாகவும் கூர்மையாகவும் உணர்த்தி சென்றிருக்கிறார்.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-8.jpg)
அண்ணாவின் தலைமைப் பண்பு
பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1949ஆம் ஆண்டு, திமுகவை அண்ணா தொடங்கினார். திமுக தொடங்கப்பட்டபோது அண்ணாவுக்கு வயது 40. கட்சியில் இருந்தவர்களில் மூத்த வயதுடையவர் அண்ணாதான் (40) என்றால் கட்சியிலிருந்த இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட தலைவர்களின் வயதை நினைத்துப்பாருங்கள். ஈவிகே சம்பத்துக்கு 23, கருணாநிதிக்கு 25 என்று இளைஞர்களை மட்டுமே கொண்ட அந்தக் கட்சியை சிறப்பாக வழிநடத்தி, காங்கிரஸ் என்ற ஆலமரத்தையே அடியோடு அகற்றியவர் அண்ணா.
அதுமட்டுமின்றி, அரசியலில் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே, "தம்பி வா! தலைமையேற்க வா!" என்று இளையவர்களையும் தலைமைக்கு வளர்த்தெடுக்கும் பண்பைக் கொண்டிருந்த பேரறிஞர் அவர்.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-1.jpg)
கொள்கையில் சமரசம் செய்தவரா அண்ணா?
திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதால்தான் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கான அதிகாரங்கள் குறைந்துவிட்டதாக பலரும் தற்போது குற்றம்சாட்டுகின்றனர். ரஷ்யா சென்றுவந்த பெரியார், சோசலிச சிந்தனைகள் மீது ஆசைகொண்டு தொடர்ந்து அது குறித்து பத்திரிகைகளில் எழுதிவந்தார். அப்போது ஆங்கிலேயர்கள், சோசலிச சிந்தனைகளை பரப்புரை செய்ய தடைவிதித்தனர். இதன் காரணமாக, பெரியார் தனது சோசலிச கருத்துகளை பரப்புரை செய்வதை நிறுத்திவைத்தார்.
இதேபோலத்தான் இந்திய - சீன போருக்குப் பின்வந்த பிரிவினைவாத தடைச் சட்டத்தால், வேறுவழியின்றியே அண்ணா தனது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார். அப்போதுகூட, "திராவிடநாடு கோரிக்கைதான் கைவிடப்படுகிறதே தவிர. அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது" என்று உரிய முறையில் தெளிவாக விளக்கினார். ஆனால், பெரியாரை ஆதரிப்பவர்கள் அண்ணாவை மட்டும் எதிர்ப்பது ஏன்?
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-6.jpg)
தமிழ்நாடு அரசியலை மாற்றிய அந்தத் தேர்தல்
1967ஆம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல்தான், இந்த மாநிலத்தையே மாற்றியது. காங்கிரஸ் என்ற மாபெரும் கட்சியை வீழ்த்த அண்ணா அனைவரையும் அணைத்துக்கொண்டார். எதிரெதிர் துருவங்களாக இருந்த கம்யூனிஸ்டுகளையும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்தார். கூடவே மபொசியின் தமிழரசுக் கழகத்தையும், சிவந்தி பா. ஆதித்தனாரின் நாம் தமிழரையும் சேர்த்துக்கொண்டார். அவருடைய ஆசான் பெரியாரும் திமுகவுக்கு எதிராகப் பரப்புரை செய்தார். ஆனால் இவை அனைத்தையும் தாண்டியும் திமு கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் அண்ணா. ஆனால் வெற்றிச் செய்தி வந்ததும், அவர் வண்டி சென்றதோ திருச்சியை நோக்கி. ஆம், திமு கழகம் வெற்றிபெற்ற பின் அண்ணா சந்தித்தது பெரியாரைத்தான்.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-4.jpg)
அதுமட்டுமின்றி அண்ணாவின் பேச்சாற்றலைக் கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. அமெரிக்காவுக்கு சென்ற அண்ணா ஆங்கிலத்தில் ஆற்றிய உரையைக் கண்டு அமெரிக்கர்கள் வியந்தனர் என்று பின்னாட்களில் நினைவுகூர்கிறார் அப்போது அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் படித்தக்கொண்டிருந்த ’இந்து’ என். ராம். அண்ணாவை அனைவருமே தங்கள் குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரராகவே கருதினர். அண்ணாவின் மரணத்துக்கு 1969ஆம் ஆண்டு அலைகடலென திரண்ட மக்களே அதற்கு சாட்சி.
![Anna 111, anna birth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4444076_imd-3.jpg)
இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை வந்திருந்த வங்க எழுத்தாளர் கர்க சட்டர்ஜி (Garga Chatterjee) கூட்டம் ஒன்றில் பேசுகையில், "வங்காளிகளும் இப்போது அண்ணாவை படிக்க ஆரம்பித்துள்ளோம். மாநில சுயாட்சி பற்றியும், மொழி திணிப்பைப் பற்றியும் அண்ணா கூறியவற்றை இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்துளோம்" என்றார். 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வழி நடத்திவரும் அண்ணா, இனிவரும் காலங்களில், இந்திய ஒன்றியத்தையே வழிநடத்துவார்...