கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). சரக்கு ஆட்டோ வாகன ஓட்டுநர்.
இவரும், இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்து என்கிற முத்தழகு(26) என்பவரும், ஆர்.பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த, கட்டிகானப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மர வியாபாரியும், வெங்கடேசனின் நண்பருமான குமார்(39) என்பவர் அங்கிருந்தார்.
அந்த நேரம் வெங்கடேசன் தனக்கு மது வாங்கி கொடுக்கும்படி குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு குமார் தர மறுத்தார்.
இதனால் வெங்கடேசன், குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரம் குமார் தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் வெங்கடேசனின் கழுத்தில் குத்தினார். மேலும் முகத்தில் பீர்பாட்டிலால் தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.
இது தொடர்பாக கொலையுண்ட வெங்கடேசனின் நண்பர் முத்தழகு கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கொலையுண்ட வெங்கடேசன் தாக்கியதில் தான் காயம் அடைந்ததாக கூறி, குமார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: காதல் திருமணம்: மணமகனின் தாயார் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை